அலுவலகத்திற்கு வர வேண்டாம்.. ஊழியர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்ததால் சார்பு செயலர் நிலைக்கு கீழ் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிபுரிய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுழற்சி முறையில் 50 விழுக்காட்டினர் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசித்து வரும் அதிகாரிகள், பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வருவதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.
இதற்கிடையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை உடனடியாக நிறுத்தப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மறு உத்தரவு வரும் வரையிலும் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.