கோவையில் நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா தேதி திடீர் மாற்றம்..!
கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இதில் முப்பெரும் நிகழ்வுகள் என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா, 40 மக்களவைத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, ஒட்டுமொத்த நாடும் வியந்து பார்க்கும் வகையில் வெற்றிக்கு நம்மை அழைத்து சென்ற கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை ஆகும்.
இதற்காக கோவை செட்டிப்பாளையம் அருகே எல்.என்.டி புறவழிச்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தேதி ஜூன் 14ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருநாள் கழித்து ஜூன் 15ஆம் தேதி அன்று திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இடமும் மாற்றப்பட்டுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் விழா நடைபெறவுள்ளது. எதற்காக இந்த திடீர் மாற்றம் என்று விசாரிக்கையில், போக்குவரத்து நெரிசல், பருவமழை ஆகிய காரணங்களா மேற்சொன்ன மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கேற்ப திமுக உடன்பிறப்புகள் உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.