திமுகவின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும் - வானதி சீனிவாசன்..!!
கோவை பாஜக அலுவலகத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பலனடைந்து உள்ளனர். இந்த வரியை குறைத்ததால் ஒன்றிய அரசுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி மூலம் ஆண்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை தமிழ்நாடு அரசிற்கு வருவாய் கிடைக்கறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மூலப்பொருட்களின் விலையை ஒன்றிய அரசு குறைத்து உள்ளது என்றார்.
மேலும் மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்து வரிவசூல் செய்கின்றது. மேலும் கிடைத்த வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. தமிழகத்திற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது எனத் தெரிவித்தார்.
சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து பேசிய வானதி சீனிவாசன், மாநிலத்தின் தலைநகரிலே ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது என்பது, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு கேள்விக் குறியாகி உள்ளது. அதேபோல் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாகவும், குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மிரட்டல் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுகவின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.