நகராட்சித் தலைவர் தேர்தல்: தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா வெற்றி..!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதி.மு.க. 12 வார்டுகளிலும், தி.மு.க. 9 வார்டுகளிலும், மதி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரி, அதி.மு.க.வை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், இருவரும் தலா 15 வாக்குகள் பெற்றதால் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து, குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் உட்பட 24 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மொத்தம் உள்ள 30 உறுப்பினர்களில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் நகராட்சி தலைவர் பதவியை உமா மகேஸ்வரி இழந்ததாக அறிவிக்கப்பட்டு, நகராட்சி தலைவர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
பின்னர், குரல் வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உமா மகேஸ்வரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்மானம் மீது ஜூலை 17-ம் தேதி மறைமுக வாக்கெடுப்பு நடத்தவும், அதன் முடிவுகளை ஜூலை 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை 18-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து உமா மகேஸ்வரி நகராட்சி தலைவர் பதவியை இழந்தார்.
இந்நிலையில், நகராட்சியில் காலியாக உள்ள தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தி.மு.க. சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் கவுசல்யா, அதி.மு.க. சார்பில் 26-வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் ஆகியோர் போட்டியிட்டனர். முன்னாள் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் தி.மு.க. உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மீதமுள்ள 28 பேர் வாக்களித்தனர்.
நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதி.மு.க.வை சேர்ந்த அண்ணாமலை புஷ்பம் 6 வாக்குகள் மட்டும் பெற்றார்.