திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 47190 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்தார். அதனை அடுத்து இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து, தமிழகத்தின் பிரதான கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா நிறுத்தப்பட்டார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி வேட்பாளராக களமிறங்கினார்.
அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா களம் கண்டார். ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை புறக்கணித்தன.
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வைத்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தற்போது 13 சுற்றுகள் முடிவடைந்துள்ளது.
இதன்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 83 ஆயிரத்து 431 வாக்குகள், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 36 ஆயிரத்து 241 வாக்குகள் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா 6 ஆயிரத்து 814 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்படி திமுக வேட்பாளர் தனக்கு அடுத்ததாக உள்ள பாமக வேட்பாளரை விட 47 ஆயிரத்து 190 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார்.