உண்ணாவிரதப் போராட்டத்தில் திடீரென குதித்த திமுக பெண் தலைவர் !
திருச்சி மாவட்டம், பெருகமணி ஊராட்சி தலைவர் கிருத்திகா தனது ஆதரவாளர்களுடன் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், பெருகமணி ஊராட்சி தலைவராக இருப்பவர் கிருத்திகா. தி.மு.க.வைச் சேர்ந்த இவர், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் பெருகமணி ஊராட்சி தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருகமணி ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் மனு கொடுத்துள்ளார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி அறிந்த ஊராட்சி தலைவர் கிருத்திகா, தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீதும், ஊழல் செய்வதாக கூறும் வார்டு உறுப்பினர் மற்றும் சிலரும் அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என கூறி நேற்று காலை முதல் பெருகமணியில் உள்ள காந்தி சிலை முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் கிருத்திகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கிருத்திகா தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் இருந்து விலகினர்.