வரும் 2026 தேர்தலில் தி.மு.க., தூக்கி எறியப்படும்: அண்ணாமலை..!

கோவையில் 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு அண்ணாமலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: ஒரு விஷயத்தை சொன்னால், பா.ஜ., அதனை செய்யும் என்பது மக்களுக்கு தெரியும். தி.மு.க., ஆட்சி முடிய இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. தமிழக அரசியலில் நிச்சயம் மாற்றம் வரும். தமிழகம் இழந்த பொலிவை பெற வேண்டும். 1998 ம் ஆண்டு பிப்., மாதம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை யாரும் மறக்க மாட்டார்கள். 28 ஆண்டுகளாக, இந்த சம்பவத்தில் இருந்து விடுதலை இல்லை. தவறாக ஒரு அரசு அமைந்தால், என்ன நடக்கும் என்பதை 28 ஆண்டுகளாக தெரியப்படுத்திக் கொண்டு உள்ளோம்.
மே 21ல் பயங்கரவாதத்திற்கு எதிரான நாள். பயங்கரவாதத்திற்கு எதிராக சத்தியம் எடுக்க வேண்டும் என மத்திய அரசுக் கூறியுள்ளது. இதனை தமிழக அரசு செய்யவில்லை. இங்குள்ள அரசியல்வாதிகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு முழக்கத்தை வைத்தாலே , அது ஒரு சமுதாயத்திற்கு எதிராக போய் விடும். அப்படிப் போனால், ஓட்டு வங்கி சரிந்துவிடும் என்பதால் எதையும் செய்யவில்லை. 2024ல் இதே இடத்தில், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
தே.ஜ., கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள சிறந்த தொழில்நுட்பங்கள் வாங்கி வைக்கப்பட்டு உள்ளன. இரு முனை போர் வந்தாலும் அதனை சமாளிக்கும் அளவுக்கு நாட்டை பிரதமர் மோடி கட்டமைத்து வருகிறார். பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட்டால், முதலில் நமது பாதுகாப்பு சொத்து உறுதி செய்யப்படும். டில்லியில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்றால், இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் எனக் கூறினர். ஆனால், அவர்களை மண்ணை கவ்வ வைத்து 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், இறுமாப்போடு, 200, 150, 170 வாங்குவோம் என சொல்லிக் கொண்டு உள்ளார். 2026ல் தி.மு.க., தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என அவர்கள் கருதுகின்றனர். கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு என முதல்வர் சொல்கிறார். இச்சம்பவத்திற்கு, ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், சிலிண்டர் விபத்து என முதல்வர் சொல்கிறர். பிறகு எப்படிநியாயம் கிடைக்கும். அரசியல் காரணத்திற்காக நியாயப்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லை. அரசு பஸ்சில், பள்ளிகளில், அண்ணா பல்கலையில் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். ஆனால், காதில் பூவை சுற்றிக் கொண்டு 200ல் வெல்வோம் என இரண்டாம் புலிகேசி போல் சொல்லிக் கொண்டு உள்ளார். ஓட்டுப்பிச்சை எடுக்கும் அரசியல்வாதிகளை புறந்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் தமிழகம் தாங்காது. தமிழகத்தில் நடக்கும் தவறுகள் திருத்த முடியாத அளவிற்கு சென்று விட்டது. அப்படிப்பட்டவறறை தி.மு.க., தலைவர்கள் செய்கின்றனர்.
பா.ஜ, ஒரு சமுதாயத்திற்கான கட்சி எனப் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், இந்திய கலாசாரத்தை பாதுகாப்பதற்கான கட்சி. காலத்தை கடந்து நிற்கும் தர்மம் சனாதன தர்மம். இதற்கு ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை. அனைவரையும் உள்ளடக்கியது அது. ஆனால், இதனை கெட்ட வார்த்தை போல் தமிழகத்தில் சொல்கின்றனர். நாம் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை. ஒரு மனிதன் தனது மதத்தை தவறாக புரிந்து கொள்ளும் வரை இந்த மண்ணில் பயங்கரவாதம் இருக்கும். 2026ல் சிறுபான்மையினரே தி.மு.க.,வை வெளியே தூக்கி போடப்போகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.