வரி உயர்வுன்னு சொல்லி குப்பை வரியை கூட கூட்டிய திமுக வருகிற தேர்தலில் தோல்வியடையும் - திண்டுக்கல் சீனிவாசன்..!
திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தியதால் அதிருப்தியில் உள்ள மக்கள் எப்போது தேர்தல் வரும் என காத்திருக்கின்றனர். குப்பை வரியைக் கூட உயர்த்திய திமுக 2026 தேர்தலில் தோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் மக்கள் விரும்பும் கட்சிகள் அதிமுக பக்கம் வரும். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.4,000 கோடி செலவழித்தது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் உதயநிதி முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார். அவரது நடவடிக்கைகள் சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.
தமிழகத்தில் சட்டமும் இல்லை; ஒழுங்கும் இல்லை. முன்னாள் அமைச்சர்களாகிய நாங்களே ஓரிடத்துக்குச் செல்ல அல்லாட வேண்டியுள்ளது. போதைப் பொருட்கள் நடமாட்டத்தின் ஒட்டுமொத்த தலைநகரமாக தமிழகம் உள்ளது. கஞ்சா கிடைக்காத இடமே இல்லை. வெற்றி பெறுவோம் என ஸ்டாலின் ஜோசியம் சொன்னாலும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் பழனிசாமி தான் முதல்வர். ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது. தேர்தல் நேரத்தில் மக்கள் ஆதரிக்கிற, மக்களுக்கு நன்மை செய்கிற கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்துவிடும் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.