1. Home
  2. தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக vs நாம் தமிழர் நேரடி போட்டி?

1

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் டிச.5ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், எந்தெந்த கட்சிகள் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கும் 3வது இடைத்தேர்தல் இதுவாகும்.
 

இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று பார்க்கப்பட்ட போது, திடீரென திமுகவே நேரடியாக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்பின் திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நிலையில் அதிமுக சார்பாக யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்த போது, திடீரென ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு வந்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அதிமுக புறக்கணித்துள்ளது. இதன்பின்னர் தேமுதிகவும் போட்டியில் இருந்து விலகிய நிலையில், தற்போது பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நாம் தமிழர் கட்சி மட்டுமே ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சீமான் பேசுகையில், அதிமுகவின் கருத்தை ஏற்கிறேன். இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்காது. கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் இருந்த போதும், திமுகவினர் இதே குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் வளர்கின்ற இயக்கம்.

களத்தில் நின்றாக வேண்டும். அதனால் நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடும். வரும் பொங்கள் திருநாளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட மேனகா நவநீதன் 10,827 வாக்குகளை பெற்றிருந்தார்.

தற்போது எதிர்க்கட்சியான அதிமுக தொடங்கி பாஜக வரை முக்கிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்திருக்கிறது. இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like