1. Home
  2. தமிழ்நாடு

மதுரையில் திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்ட அறிவிப்பு!

1

தமிழர்களின் பழங்கால பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக, தமிழர்களின் வரலாற்றை உலகமே வியந்து பார்க்க வைக்கும் தொன்மைக்குரிய இடமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதல் 3 கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொண்ட மத்திய அரசு, ஆய்வுப் பணியை பாதியில் விட்டது.

அதையடுத்து மத்திய அரசு பாதியில் விட்ட பணியை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை கையில் எடுத்தது. தற்போதைய நிலவரப்படி 9 கட்ட அகழாய்வு பணிகளை நிறைவு செய்துள்ளது. அதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 1 மற்றும் 2 ஆம் கட்ட அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக அரசைக் கண்டித்து வருகிற 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில் மதுரை, விரகனூர் சுற்றுச் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட மாணவர் அணிச் செயலாளர் இரா. ராஜீவ்காந்தி, “அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசைக் கண்டித்து இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கீழடி என்கிற பெயரே பாஜக அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்த கால அடிமை எடப்பாடி அரசும் பா.ஜ.க-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது.

ஆனால் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட, மாநகர், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த பதிவில் “ மத்திய தொல்லியல்துறைக்கு கீழடி தொடர்பாக இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை. அதனால் தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை வெளியிட தாமதம். எனவே, இவற்றை அரசியலாக்கி, அவசரப்படுவதற்குப் பதிலாக அறிவியல்பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்குமாறு” கூறியிருந்தார்.

Trending News

Latest News

You May Like