1. Home
  2. தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது திமுக ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - சீமான்..!

1

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா முழுவதும் நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்றன. இதையடுத்து, நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் பெரும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் கொடிய நீர் தேர்வை ஆரம்பம் முதலே நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களையும் நாம் தமிழர் முன்னெடுத்தது. ஆனால், நீட் தேர்வால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்தியா முழுவதும் பல மாணவ மாணவிகள் உயிரிழந்த போதிலும், நீட் தேர்வை ரத்து செய்ய இந்திய ஒன்றிய அரசு மறுத்துவருவது கொடுங்கோன்மை இன்றி வேறொன்றும் இல்லை.

அதன் உச்சமாக, நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாளிலும் பல முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருப்பதோடு, அதற்காக வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் மிகப்பெரிய மோசடி அரங்கேறியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 உறுப்பினர்களை பெற்றிருக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பலத்தை பயன்படுத்தி, நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சிகளை திமுக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like