இன்று இரவு 7 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். இந்த குளிர்கால கூட்டத்தொடர் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடக்கும் மூன்றாவது கூட்டத்தொடர். அரசு எந்தெந்த மசோதாக்களை அறிமுகப்படுத்தும், எதை எதை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை முன்வைக்கக்கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நவம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில், நவ.25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படவுள்ளது” என கூறியுள்ளார்.