திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு நிதின் கட்கரி விளக்கம்..!

மக்களவையில் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, தேசிய நெடுஞ்சாலை (என்ஹச்-38)-ல், “மதுரை - தூத்துக்குடி பகுதியில் பராமரிப்பு பிரச்சினைகள் தொடர்பாக வரும் பல்வேறு புகார்கள் குறித்து அரசுக்குத் தெரியுமா? அவற்றைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இந்தச் சாலை மோசமாகப் பராமரிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில், “நீங்கள் குறிப்பிட்ட சாலைப் பகுதி பற்றி வந்திருக்கும் புகார்களை அரசு அறிந்திருக்கிறது. இந்த சாலை ஆரம்பத்தில் பிஒடி (பில்ட்-ஆப்ரேட்-டிரான்ஸ்பர்) திட்டத்தின் கீழ் மதுரை - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வேஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இருப்பினும், அந்நிறுவனத்தின் பல்வேறு தவறுகள் காரணமாக, ஒப்பந்தம் 2023-ம் ஆண்டும் மார்ச் 17-ம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டது. இதன் பின், அப்பகுதியிலுள்ள முழு சாலையின் மேலடுக்கு மற்றும் பராமரிப்புப் பணி ரூ.144.6 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை, 46.3 கி.மீ சாலைக்கான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் டிசம்பர் 2025-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.