1. Home
  2. தமிழ்நாடு

கழுத்தளவு உள்ள தண்ணீரில் இறங்கி ஆய்வு செய்த ஶ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ..!

1

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை கழுத்தளவு உள்ள தண்ணீரில் இறங்கி ஆய்வு செய்த ஶ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி!

திருச்சி  காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூர், திட்டுக்கரை, சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர், மேக்குடி, கடியாகுறிச்சி, அல்லூர், பழுர், முத்தரசநல்லூர், கூடலூர், கம்பரசம்பேட்டை, மல்லச்சிபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக வரும் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்கள் இக்கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.  

இந்த வாய்க்கால்களில் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் மண்டி தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால், இப்பகுதி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வது காலதாமதம் ஆகி வருவதாகவும், ஆகவே, வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். 

உடனே அவர், நீர்வளத்துறை அலுவலகத்திற்கு விவசாயிகளுடன் சென்று செயற்பொறியாளர் நித்தியானந்தத்தை சந்தித்து வாய்க்கால்களை தூர்வாரி கரையை பலப்படுத்த கோரிக்கை மனு அளித்தார்.  அப்போது அந்தநல்லூர் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் மலர் அறிவரசன், திமுக நிர்வாகி கைக்குடி சாமி, எம்.எல்.ஏ வின் உதவியாளர் சோமரசம்பேட்டை ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி துணை அமைப்பாளர் லெட்சுமணன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.  அதன்பேரில், வாய்க்கால்களை  தூர் வாரவும், மணல் மூட்டைகளை அடுக்கி கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

இந்நிலையில் பழனியாண்டி எம்.எல்.ஏ. வாய்க்காலில் இறங்கி தண்ணீர் செல்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மணல் மூட்டைகளையும் பார்வையிட்டார்.  கழுத்தளவு நீரில் இறங்கி எம்.எல்.ஏ.ஆய்வு மேற்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


 

Trending News

Latest News

You May Like