தவெக கட்சி குறித்து திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் சினிமா பாணியில் விமர்சனம்..!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியை பதிவு செய்ய அவர் விண்ணப்பித்திருந்தார். தொடர்ந்து, கட்சியின் கொடி மற்றும் பாடலை கடந்த மாதம் 22-ம் தேதி விஜய் வெளியிட்டார். இதனிடையே கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மாநாட்டுக்கு விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளார். இதனால், தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையில் திமுக சார்பில் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தாம்பரத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இன்று நடிகர் எல்லாம் அரசியல் பக்கம் வந்து விட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்ன என்று நாம் பார்த்துவிட்டோம். அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர் விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அவர் ஆரம்பிச்ச அரசியல் கட்சி 6 மாதம் தான் ஓடும். அதற்கு மேல் ஓடாது. யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுக தான்" என பேசினார்.