1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

1

தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் விவரம் பின்வருமாறு:-

முதல்வருக்கு பாராட்டு:

மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் - மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன் - நான் முதல்வன் - மக்களைத் தேடி மருத்துவம் - நம்மைக் காக்கும் 48 - பள்ளி மாணவ மாணவியருக்கு தினமும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - குழந்தைகளுக்கு 'ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்' - கலைஞர் நூற்றாண்டு நூலகம் - கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை -- பெருந்தலைவர் காமராஜர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம் - பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் - அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என இந்தியாவுக்கே முன்மாதிரியான முத்திரை பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றித் தந்து திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.  

சொன்னதை எல்லாம் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் அடுத்தடுத்து நிறைவேற்றி - மக்களுக்காகவே, மக்கள் அரசை நடத்தி வரும் நிர்வாகத் திறமைமிக்க தமிழ்நாடு முதல்வருக்கு இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு தனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

மத்திய அரசுக்கு கண்டனம்:

2014 தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பத்தாண்டுகளாக நிறைவேற்றாமல் - அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்காமல் மந்த நிலைமையில் மத்திய அரசு இருக்கிறது. இந்திய நாட்டின் அனைத்துத் தார்மீக அறநெறி - அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக அரசு இருக்கிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் சிந்தனைகளைத் தள்ளி வைத்து, இந்தியாவின் அனைத்துத் தர மக்களுக்கும் குறைந்தபட்ச நன்மைகளைச் செய்யும் செயல்களை மூன்றாவது முறை மக்களால் தனிப் பெரும்பான்மை வழங்கப்படாத தேர்தல் முடிவுகளுக்குப் பின்னராவது செய்ய வேண்டும்.

மீனவர்கள் நலன்களை காப்பீர்:

இலங்கையில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தலும், இந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்று அதிபர் அனுர குமார திசநாயகா தலைமையில் - மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் 'தேசிய மக்கள் சக்தி கட்சி' கூட்டணியின் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

மணிப்பூர் தீயை அணைப்பீர்:

கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. மனித உரிமைகள் பறிக்கப்பட்டு - மனித நேயம் நசுக்கப்பட்டு - மனித பெருந்துயரமே அம்மாநிலத்தை ஆட்டிப் படைக்கிறது. எங்கு பார்த்தாலும் போராட்டம், வன்முறை, தீ வைப்பு, மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல், கலவரம் எனச் சட்டம் ஒழுங்கும் பொது அமைதியும் வரலாறுகாணாத வகையில் சீர்குலைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இனியும் வேடிக்கை பார்க்காமல் - மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து மனிதநேயம் உயிர்பெற மத்திய அரசு குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நிதி உரிமையை நிலை நிறுத்துக:

16-வது நிதிக்குழுவின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான நிர்வாகத் திறன்மிக்க அரசைப் பாராட்டியிருப்பதைப் பெருமிதத்துடன் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது. முதல்-அமைச்சரின் கோரிக்கைகளை வழிமொழிந்த அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தக் கூட்டம் நன்றி செலுத்துகிறது. தமிழ்நாட்டின் கோரிக்கைகள் 16-வது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும் என்றும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தலுக்குத் தயாராவோம்:

கழக அரசின் சாதனைகள் - திட்டங்கள் - முதல்-அமைச்சரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் மூலமாகத் தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்குங்கள் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு கேட்டுக் கொள்கிறது. கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்பும், ஒரு இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில் தேர்தல் பரப்புரைப்பணிகளைத் தொடங்குங்கள். துண்டுப் பிரசுரங்கள் - திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தைத் தொண்டர்கள் அனைவரும் தொடங்குங்கள். ஏழாவது முறையும் ஏற்றம் காண்போம் என்று கோடிக்கணக்கான தொண்டர்களது உள்ளத்துக்கு அன்பான வேண்டுகோளை இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழு முன்வைக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Trending News

Latest News

You May Like