1. Home
  2. தமிழ்நாடு

ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் வாழ்க கோஷம் போட்டு திமுகவினர் கொத்தடிமைகள் என நிரூபித்துவிட்டனர்: ஜெயக்குமார்!

1

“சிலம்புச் செல்வர்” ம.பொ.சிவஞானத்தின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தி.நகர், போக் சாலையில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

சிலம்பு செல்வர் மாபொசியின் 119 வது பிறந்த நாள்.இந்த விழா அரசு விழாவாக கொண்டாட முக்கிய காரணம் அதிமுக தான். சென்னையும், திருத்தணியும் தமிழ்நாடோடு இருப்பதற்கு மாபொசி தான் காரணம். அவர் போராடவில்லை என்றால் சென்னை நம்மிடம் இருக்காது. 2 ஆண்டுகள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தவர். தலை கொடுத்தாவது தலைநகரை காப்போம் என மாபொசியின் போராட்டம் பல உண்டு. மாபொசி தமிழ் மகான். வீரம் செறிந்த பெருமகனார் மாபொசி. அந்த வீரம் கொஞ்சம் கூட திமுகவுக்கு இல்லை. தன்மானத்தை விட்டு கொத்தடிமைகள் என திமுக எம்பிக்கள் இந்தியா முழுவதும் காட்டி உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பதவியேற்கும் போது உதயநிதி வாழ்க என சொல்வது கொத்தடிமைகள் என்பது தெளிவாக தெரிகிறது. அண்ணா உருவாக்கிய கட்சி திமுக. அந்த கட்சி தற்போது கொத்தடிமைகள் முன்னேற கழகமாக மாறி விட்டது. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் உதயநிதி பெயரை சொல்லியிருப்பது வேதனை. குறிப்பாக கட்சியின் மூத்த நிர்வாகளான செல்வகணபதி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உதயநிதி வாழ்க சொல்வது கேவலமாக இருக்கிறது. வாக்களித்த மக்களே முகம் சுளிக்கும் வகையில் திமுக எம்பிக்கள் நடந்து கொண்டுள்ளனர். கொத்தடிமைகளை டெல்லி அனுப்பி விட்டோமே என வாக்காளித்த மக்கள் வேதனை படுகின்றனர். ஜனநாயகம் இல்லாத கட்சி தான் திமுக. நேற்று முளைத்த காளான் உதயநிதியை வாழ்க என சொல்லலாமா? ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் நினைப்பது தான் திமுகவில் நடக்கும். அடுத்ததாக இன்பநிதிக்கு சேவை செய்வார்கள் திமுகவினர். தன்மானத்தை இழந்து பதவிக்காக வாழ்க என சொல்கிறார்கள் எம்பிக்கள். மூத்த எம்பி தயாநிதி கூட உதயநிதி வாழ்க சொல்வது மிகவும் கேவலமான ஒன்று.

இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவத்தை தடுக்க திமுக தவறி விட்டது. திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை மீனவர்களே திருடி தங்களுக்கு பயன்படுத்தி கொள்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. இலங்கை அரசு திருட்டு அரசாங்கம். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பெரிதாக நடைபெறவில்லை. ஏன் திமுக எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் தாக்குதல் சம்பவங்களை தடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினோம். ஏன் திமுக இந்த 3 ஆண்டில் எதுவும் செய்யவில்லை. கும்பக்கரண அரசு திமுக. ஜனநாயகம் செத்துபோய்விட்டது.

கேள்வி நேரம் நடத்தவே திமுக விடவில்லை. விவாதிக்க திமுக பயப்படுகிறது. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து நான் சட்டசபையை நடத்தி உள்ளேன். திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் போல சபாநாயகர் செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு கேடு. ஆயிரத்தில் ஒருவன் பட வசனம் திமுகவிற்கு பொருந்தும். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என்று முடிவு எடுத்து விட்டது. இதே முடிவை அனைத்து எதிர்கட்சிகளும் எடுக்க வேண்டும். இந்த முடிவு மூலம் தேர்தல் ஆணையம் விழித்து கொள்ளும். திமுகவுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் புறக்கணிப்பு மூலம் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like