ரூ.1 கோடி இழப்பீடு கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை டெல்லி போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் ஜாபர் சாதிக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதாகக் கூறி ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் அணியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி விட்டோம். இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஜாபர் சாதிக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசவும், கருத்துக்களை பதிவிடவும் பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே பதிவிட்டுள்ள கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.