1. Home
  2. தமிழ்நாடு

திமுக ஃபைல்ஸ் : 2ஜி வழக்கு ஆடியோக்களை வெளியிட்ட அண்ணாமலை..!

1

ஜன.15 அன்று டி.ஆர்.பாலுவும், அப்போதைய உளவுத்துறை அதிகாரி ஜாஃபர் சேட்டும் பேசும் ஆடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை.இந்நிலையில் நேற்று காலை ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அ.ராசாவும், அப்போதைய உளவுத்துறை தலைவர் ஜாஃபர் சேட்டும் பேசிய ஆடியோ உள்ளது. இதில் சிபிஐ இயக்குநரை வைத்து 2ஜி வழக்கு விசாரணயை தங்களுக்கு சாதகமாக எவ்வாறு கையாண்டனர் என்பதை இருவரும் பேசுகின்றனர்.

2 ஜி வழக்கு 2010-11 ஆம் ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் அரசையும் மாநிலத்தில் திமுக அரசையும் வீழ்த்த முக்கிய காரணியாக அமைந்தது. திமுகவின் அ.ராசா, கனிமொழி, சரத் ரெட்டி உள்ளிட்டோர் இதில் சிக்கி சிறைப்பட்டனர். அ.ராசா பின்னர் இந்த வழக்கில் வாதாடி வெளியில் வந்தார். அவரது விடுதலையை எதிர்த்து, வழக்கில் பல சாட்சியங்கள் விசாரிக்கப்படவில்லை, வழக்கு முறையாக செல்லவில்லை என்று சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.

2 ஜி வழக்கு சம்பந்தப்பட்ட 4 ஆடியோக்களை கடந்த 2014 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரசாந்த பூஷன் வெளியிட்டார். அதில் அப்போதைய உளவுத்துறை அதிகாரி ஜாஃபர் சேட், கனிமொழி, கருணாநிதியின் செயலர் சண்முகநாதன், கலைஞர் டிவி எம்.டி சரத் ரெட்டி உள்ளிட்ட பலர் பேசியது இருந்தது. இவைகள் தான் மொத்த ஆடியோக்கள் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் திடீரென அண்ணாமலை கடந்த 15-ம் தேதி திமுக ஃபைல்ஸ் 3 என்று ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில் டி.ஆர்.பாலு- ஜாஃபர் சேட் பேசுவது பதிவாகியிருந்தது. அதில் சிபிஐ ரெய்டை எப்போது தொடங்கவேண்டும் என இவர்கள் பேசிக் கொண்டிருந்தது அம்பலமானது.

கடந்த ஜன 15 அன்று பேசி அண்ணாமலை மேலும் பல ஆடியோக்கள் வெளியாகும் என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று காலை அண்ணாமலை ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்முறை ஆடியோவில் சிக்கியுள்ளது 2ஜி கதாநாயகன் அ.ராசாவும், ஜாஃபர் சேட்டும். இருவரும் பேசுவது தெளிவாக பதிவாகியுள்ளது. இதில் ஜாஃபர் சேட்டிடம் அ.ராசா டெல்லியில் நடந்த பல தகவல்களை சொல்கிறார். குறிப்பாக அப்போதைய சிபிஐ இயக்குநர், ஸ்வான் டெலிகாம் ஆட்கள் ஆகியோரிடம் நடத்திய சந்திப்புகள் குறித்து சொல்கிறார்.

அவர்களிடையே நடந்த உரையாடல்

**அ.ராசா: எப்படி இருக்கீங்க

ஜாஃபர் சேட்: சொல்லுங்க சார்

அ.ராசா: ஒன்றுமில்லை நல்ல செய்திதான் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.

ஜாஃபர் சேட்: சரிங்க சார்

அ.ராசா: அவர்கள் வந்துட்டு போய்விட்டார்கள், அவங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுத்துள்ளார்கள்.

ஜாஃபர் சேட்: சரிங்க சார்

அ.ராசா: அவர்கள் அந்த விவகாரத்தை அருமையாக கையாளுகிறார்கள்.

ஜாஃபர் சேட்: நம்ம சொன்ன இஷ்யூவா சார்?

அ.ராசா: ஆமா இந்த விவகாரம் எல்லாம் வராமல் பார்த்துக்கணும். அவர்கள் வேறு சில ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். நேற்று ஒரு நபர் ஜாயிண்ட் பண்ணினார் தெரியுமா?

ஜாஃபர் சேட்: ஆமா சார்

அ.ராசா: அவர்கிட்ட சொல்லிட்டேன், பிக்சர்லேயே வராது

ஜாஃபர் சேட்: நேற்று யார் சார் சேர்ந்தது?

அ.ராசா: அந்த அமைப்பின் தலைமை

ஜாஃபர் சேட்: ஆமாமா, ஆமாமா ஏ.பி (AP) yes yes (ஏ.பி.சிங் சிபிஐ இயக்குநர்)

அ.ராசா: பாம்பே ஆளுங்க,நம்மாளுங்கள வச்சி எது எதெல்லாம் வரணும், எது எதுதெல்லாம் வரக்கூடாது, என்ன நடைமுறை என்று ஒரு முடிவுக்கு வந்தோம்.

ஜாஃபர் சேட்: ஓக்கே சார்

அ.ராசா: எக்காரணத்தைக்கொண்டும் கட்சிப்பெயர் வெளியில் வரக்கூடாது, நீங்க கேள்வி கேளுங்க அது கடுமையாக இருக்கக்கூடாது அப்படி முடியுங்கள், என்று சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் இதை முடித்திருக்கிறார்கள்.

ஜாஃபர் சேட்: அருமை, யார் பேசியது சார்?

அ.ராசா: ஸ்வான் யூனிட் (ஸ்வான் டெலிகாம்) தான்

ஜாஃபர் சேட்: அவர்கள் இருவருமா சார், ஓக்கே சார்.

அ.ராசா: ரெண்டு பேரும் நேரா இப்ப பென்ஸ் காரில் வந்து பார்த்துட்டு போய்விட்டார்கள்.

ஜாஃபர் சேட்: சரிங்க சார்

அ.ராசா: ரெண்டு பேருக்கும் நான் சொல்லிவிட்டேன், ஒன்றும் பிரச்சனை இல்லை, என்ன மெசேஜுன்னு கேட்டாங்க. ஒன்றும் இல்லை எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னேன். அப்ருவர் ஆக்கிவிடுகிறேன் ஏதாவது சொல்ல முடியுமான்னு கேட்டாங்க.

ஜாஃபர் சேட்: ஓக்கே சார்

அ.ராசா: அவர்கள் அப்ருவர் ஆனால் பெரிய பிரச்சனை ஆகிடும் ஸ்டேட்மெண்ட் வாங்கி ரெக்கார்ட் பண்ணிப்பார்கள், சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டால் ஹரிஷ் சால்வேவை வைத்து முடித்து விட்டுவிடுவார்கள்.

ஜாஃபர் சேட்: வாக்குமூலம் கொடுத்துகிட்டிருக்காங்களா?

அ.ராசா: ஹரிஷ் சால்வே டேக் ஒவ்வர் செய்து கொள்வார், எப்படி ராசாவை தெரியும்? எப்படி மினிஸ்ட்ரை பார்த்தாய்? என்று கேள்விகள் வரும் என்பதை எல்லாம் ஹரீஷ் சால்வே பார்த்துக்கொள்வார்

ஜாஃபர்சேட்: அதில் ஒரு காப்பி கிடைத்தால் எனக்கு அனுப்புங்கள் சார்

அ.ராசா: ஓக்கே கேட்டு வாங்கி அனுப்புகிறேன்.

ஜாஃபர் சேட்: ஃபைன் சார்

அ.ராசா: இங்க என் வீட்டுக்கு தைரியமா வந்து பார்த்துட்டு போனார்கள். ஏன் என்னை வந்து பார்த்தீர்கள் என்று கேட்டேன். இல்லல்ல சார் ஒன்றும் பிரச்சனை இல்லன்னாங்க, அவங்க (சிபிஐ) மற்ற ஆப்ரேட்டர்களிடமும் சேர்ந்து வேலை செய்கிறார்கள். யூனிடெக் மற்றும் ஸ்வான் இருக்கில்ல டேட்டாகான், வீடியோகான் அவர்களிடமும் இவர்கள் (சிபிஐ)பேசிக்கிட்டிருக்காங்க. இந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பேசிக்கிட்டிருக்காங்க . ஜாஃபர்சேட்; அவ்வளவுதான் அதோடு முடிச்சுக்குவோம்

அ.ராசா: சண்டாலியாகிட்ட (அ.ராசாவின் செயலர்) பேசிக்குவாங்க, என்னிடமும் கேள்விகளை கொடுத்துவிடுவார்கள், அல்லது பேருக்கு என்னை அழைப்பார்களாம், வெளிநாட்டுக்கு கூட அவர்கள் போகவில்லையாம். வெளிநாட்டுக்கு ஸ்விஸ்ஸுக்கு எடிசிலாட்டுக்கு போவதாக சொல்லிகிட்டிருந்தாங்கல்ல (இத்துடன் உரையாடல் முடிகிறது). ** இந்த உரையாடல் மூலம் ஆ.ராசா ஜாஃபர் சேட்டிடம் சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் தன்னை வந்து சந்தித்ததாக சொல்கிறார். அவர் சொல்லும் தேதியில் தான் ஏ.பி.சிங்கும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் குறித்தும், அதில் எவ்வாறெல்லாம் விசாரணை இவர்கள் இஷ்டத்திற்கு மாற்றப்பட்டது என்பதை உரையாடல் வெளிப்படுத்துகிறது.

பின்னர் இந்த உரையாடலில் கலைஞர் டிவி விவகாரத்தில் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி வாக்குமூலம் வாங்க வேண்டும், கட்சியின் பெயர் சிறிதும் வெளியே வரக்கூடாது என்பது பற்றி சிபிஐ இயக்குநரிடம் பேசியதாக ஜாஃபர் சேட்டிடம் அ.ராசா சொல்கிறார்.

இந்த உரையாடல் நடந்த 1-12-2010 நேரத்தில் அ.ராசாவுக்கு சம்மன் அனுப்பப்படவில்லை, அதன் பின்னர் 20-12-2010 அ,ராசாவுக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. அ.ராசாவுக்கு சம்மன் வழங்கப்படுவதற்கு முன்பு வரை கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் வெளியில் தெரியவில்லை. அ.ராசாவுக்கு சம்மன் வழங்கிய 3 நாள் கழித்து கலைஞர் டிவி வாங்கிய 200 கோடி ரூபாயை திருப்பி கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பின்னர் இந்த விவகாரம் எந்த அளவுக்கு வெளிப்பட்டது என்பதை வாசகர்கள் அறிவர்.

18.02.2011 அன்று கலைஞர் டிவி வளாகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. சிபிஐ நடத்திய ரெய்டுகள் வெறும் கண்துடைப்பு என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 20.02.2011 அன்று ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சமீபத்தில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இரவு கூட்டம் நடைபெற்றது, கட்சித் தலைவர் கருணாநிதி, அவரது வாரிசுகள் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், கலைஞர் டிவி சிஇஓ ஷரத் குமார் மற்றும் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமன் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இவர்கள் அனைவரும் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் இரவு 11 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4 மணி வரை நடந்தது. கட்டிடத்தின் வெளிப்புற விளக்குகள் அணைக்கப்பட்டன. பிப்ரவரி 13, 2011 அன்று, கலைஞர் டி.வி தொடர்பான அனைத்து முக்கியமான ஆவணங்களும் பெருங்குடி டம்ப் யார்டுக்கு சாக்கு பைகளில் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.

பிப்ரவரி 15, 2011 அன்று, கலைஞர் டிவி தொடர்பான அனைத்து பில்களும் சுக்குநூறாக கிழிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் (சென்னை) மாநகராட்சி தொட்டிகளில் கொட்டப்பட்டது. ’மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவதற்கு முன்னரே, கலைஞர் டிவியில் சிபிஐ ரெய்டு நடத்தி அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி வேண்டும்” என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அண்ணாமலை வெளியிட்ட இந்த ஆடியோ ஜெயலலிதா அறிக்கையை உறுதிப்படுத்துகிறது, அதேவேளையில் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு தனது கூட்டணிக்கட்சியான திமுகவை காப்பாற்ற எந்த வகையில் எல்லாம் உதவி செய்தது என்ற குற்றச்சாட்டு ஆ.ராசா-ஜாஃபர் சேட் உரையாடல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையற்ற விசாரணை தான் 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாக காரணமாக அமைந்தது. இந்த ஆடியோ வெளியானதன் மூலம் 2ஜி வழக்கு புதிய வேகம் எடுக்கும் என தெரிகிறது.

Trending News

Latest News

You May Like