உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் தி.மு.க.,வினர், டி.எஸ்.பி., பேரம் பேசியுள்ளனர் - அண்ணாமலை..!

தமிழக பா. ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில், ஐகோர்ட் மதுரைக்கிளை , தி.மு.க., அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மாவட்ட எஸ். பி ஆசிஷ் ராவத்தை, அவசர அவசரமாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது குறித்துக் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம்.
இளைஞர் அஜித் குமாரை, முதல் தகவல் அறிக்கை கூடப் பதியாமல், தனிப் படை எப்படி விசாரித்தது? ராமநாதபுரம் சரக போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்களா? அல்லது அவர்களுக்குத் தெரியாமல், தனிப்படை விசாரித்ததா? அப்படியானால், போலீஸ், உயர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இல்லையா?
ஊராட்சித் தலைவரின் கணவரான தி.மு.க.,வைச் சேர்ந்த சேங்கைமாறன், தி.மு.க.,வைச் சேர்ந்த மகேந்திரன், திருப்புவனம் தி.மு.க., நகரச் செயலாளர் காளீஸ்வரன் ஆகியோருடன், மானாமதுரை டி.எஸ்.பி.,யும் சேர்ந்து, உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் பேரம் பேச முற்பட்டது போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமலா?
மானாமதுரை டி. எஸ்.பி., சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மாவட்ட எஸ். பி., ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்? இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, போலீஸ் உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற தி.மு.க., அரசு முயற்சிக்கிறதா?
இளைஞர் அஜித்குமாரை, சீருடை அணியாத சிலர், கடுமையாகத் தாக்கும் காணொளியைப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது. இனி போலீசார் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட எஸ். பி., ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஐகோர்ட் மதுரைக்கிளை கூறியிருப்பதைப் போல, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
கண்துடைப்புக்காகப் பணிமாற்றம் செய்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க., அரசு நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து, இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, திமுக அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மாவட்டக்… pic.twitter.com/fKzuS4njtN
— K.Annamalai (@annamalai_k) July 1, 2025
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து, இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, திமுக அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மாவட்டக்… pic.twitter.com/fKzuS4njtN
— K.Annamalai (@annamalai_k) July 1, 2025