திமுகவுக்கு 10 சதவீதம் கூட வாக்கு வங்கி இல்லை - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்..!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகன், “திமுக கூட்டணி உடையும் நிலையில் உள்ளது. அந்தக் கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேற உள்ளன. அதேவேளையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வர உள்ளன. இது குறித்து பாஜக தேசிய தலைவர்கள் முடிவு செய்வார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “திமுக கூட்டணி உடையும் நிலையில் உள்ளது. அந்தக் கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேற உள்ளன” என எல்.முருகன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நத்தம் விஸ்வநாதன், “திமுகவில் யாரும் மகிழ்ச்சியோடு இல்லை. 10 சதவீதத்திற்கு மேல் திமுகவுக்கு இன்று வாக்கு வங்கி இருக்காது. கூட்டணிக் கட்சிகள் தான் பலம்.
குறிப்பாக திருமாவளவனின் பலம் அவருக்கே தெரியவில்லை. திமுகவை விட அதிக வாக்கு வங்கி இருப்பது திருமாவளவனிடம். ஆனால், அவர் வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை. இவரின் வாக்கு வங்கி, சிறுபான்மையினரில் இருக்கும் கொஞ்சம் வாக்கு வங்கி ஆகியவற்றை கழித்துவிட்டு பார்த்தால் திமுகவில் ஒன்றுமே இல்லை. ஆக, திமுகவுக்கென 10 சதவீத வாக்கு வங்கி கூட கிடையாது” எனத் தெரிவித்தார்.