சாலை விபத்தில் திமுக கவுன்சிலர், அவரது 6 மாத குழந்தை உயிரிழப்பு!
கோவை போத்தனூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் செட்டிபாளையம் 10 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு ஆறு மாதமான பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று ஈரோட்டில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
ஈரோடு சென்று கொண்டிருந்தபோது பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த கார் சந்தோஷ் குமார் ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சந்தோஷ்குமார் மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி இந்துமதி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் அறிந்த பெருமாநல்லூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் திமுக கவுன்சிலர் மற்றும் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.