1. Home
  2. தமிழ்நாடு

திமுக வேட்பாளர் கையில் ‘எலுமிச்சம்பழம்’..?

1

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் என்பது கடந்த 10ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. திமுக சார்பாகப் போட்டியிடும் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார், திமுக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மறைந்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் இளைய மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்ட நான்கு பேருடன் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, கையில் எலுமிச்சம்பழம் ஒன்றை வைத்திருந்தார்.காரிலிருந்து இறங்கும்போதே, அதனைக் கையில் வைத்திருந்த அவர், வேட்பு மனு தாக்கல் செய்யும்போதும், கையெழுத்திடும்போதும் தனது கையிலேயே வைத்திருந்தார்.

பகுத்தறிவுக் கொள்கை கொண்ட கட்சியான திமுகவின் வேட்பாளர், கையில் எலுமிச்சைப் பழத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன.அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனவே திமுக, நாதக இடையே நேரடி போட்டி நேரிட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் பேசுகையில், “தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் திமுக தான் வெற்றிபெறும் என மக்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சூழலில், மக்களுக்காகத் திமுக செய்த உதவிகளை முன்னிறுத்தி நாங்கள் இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெரிய வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றியை எங்களுக்கு வழங்குவார்கள் என நம்பிக்கையோடு இடைத்தேர்தல் களத்தை நாங்கள் சந்தித்துள்ளோம்.

ஈரோடு கிழக்கு தொகுதிமீது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய நம்பிக்கைகளை வைத்துள்ளனர். எனவே, கண்டிப்பாக எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்” எனவும் வி சந்திரகுமார் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “திமுக இப்போது மக்களுக்கான திட்டத்தை முன்னெடுத்து சென்று கொண்டு இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.

அப்படி நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் 100% திமுக வெற்றி என்று சொன்னால் அருகில் இருக்கும் பெண்கள் 100% இல்லை 200% திமுக வெற்றிபெறும் எனக் கூறுகிறார்கள். எனவே மக்கள்மீது எங்களுக்குப் பெரிய நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like