1. Home
  2. தமிழ்நாடு

திமுகவில் கல்வியாளர், மாற்றுத் திறனாளிகள் அணி நியமனம்!

Q

திமுகவில் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, ஐடி விங், மீனவரணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, ஆதிதிராவிடர் நலக் குழு உள்பட 23 அணிகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி மதுரையில் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

 

அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு என புதிய சார்பு அணியும், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் திமுகவில் அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. ஆனாலும், இரு சார்பு அணிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தனர்.

 

இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “திமுக சட்ட திட்டம் விதி 31, பிரிவு 21-ன் படி ஸ்டாலினால் கல்வியாளர்கள் அணி அறிவிக்கப்பட்டது. அணியின் தலைவராக புலவர் செந்தலை கவுதமன், செயலாளராக முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் நியமிக்கப்படுகிறார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு அறிவிப்பில், “திமுக மாற்றுத் திறனாளிகள் அணித் தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக டி.எம்.என்.தீபக்கும் நியமனம் செய்யப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியாளர் அணித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செந்தலைக் கவுதமன், சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றவர். வரலாற்று ஆய்வாளராகவும் உள்ள இவர், பகுத்தறிவு இயக்கத்தில் பாரதிதாசன், தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு, சூலூர் திராவிட இயக்க வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அண்ணா அறிவுக்கொடை - 110 தொகுதிகளின் தொகுப்பாசிரியராகவும் இருந்தார்.

கல்வியாளர் அணிச் செயலாளரான தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் ஆவார். இவரது சகோதரர் தங்கம் தென்னரசு தற்போது நிதி அமைச்சராக பணியாற்றி வருகிறார். சென்னை ராணி மேரிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தற்போது அதே தொகுதியில் எம்.பியாக இருந்து வருகிறார்.

பேராசிரியர் தீபக் சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். டிசம்பர் 3 இயக்கத்தை நிறுவி அதன் தலைவராக செயல்பட்டு வரும் தீபக் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக கடந்த பல வருடங்களாக தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார். தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் தொடர்பான குழுகளில் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் உள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரெ.தங்கம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்து வந்தார். மேலும், கடந்த பல ஆண்டுகளாக திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

கல்வியாளர், மாற்றுத் திறனாளிகள் அணிக்கு விரைவில் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like