மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளில் தொண்டர் பலி..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்து நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நெய்வேலியில் கான்ட்ராக்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வெங்கடேசன் இன்று (ஆக.25) கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த பகுதியில் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கொடிகம்பம் நடும் இடத்திற்கு மேலே சென்ற உயர்அழுந்த மின்சாரக் கம்பியில், கொடிக்கம்பம் உரசியதால் வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். அப்போது, அவரை காப்பாற்ற முயற்சி செய்த மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தற்போது காயமடைந்த 5 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக நடந்த இந்த அசம்பாவித சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.