இனி தேமுதிக பொது செயலாளருக்கு முழு அதிகாரம..!
மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து, சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்று வருகிறார்கள்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்த பின், அக்கட்சி முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதனால் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
யார் கூட்டணிக்கு சென்றாலும், 4 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என பிரேமலதா கறார் காட்டுவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில்,” மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக தலைமை திட்டமிட்டுள்ளதாக பிரேமலதா பேசியுள்ளார். யாருடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனவும் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
மேலும் கூட்டணி குறித்து முடிவு எடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.