இன்று தீபாவளி : எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம் எது?

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசும், பலகாரமும் முதலிடம் பிடிக்கும். உடம்பில் சூடு போக நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது பாரம்பரியமான வழக்கமாகும். இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். நவம்பர் 12 ஆம் தேதியன்று தீபாவளி நாளில் அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
தீபாவளி நாளில் தலையில் தேய்க்கும் நல்லெண்ணெயை காய்ச்சிதான் தேய்க்க வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து வானலியில் நல்லெண்ணெய் ஊற்றி கொஞ்சம் மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு தோலுடன் தட்டிப்போட்டு கூடவே சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து புகையாமல் காய்ச்சி ஆற வைப்பார்கள். அதன் பின்னர் அதனை தலையிலும் உடலிலும் தேய்ப்பது நல்லது.
தீபாவளி மட்டுமல்லது பொதுவாகவே நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் ஓய்வு எடுப்பது அவசியம். குளிர்ச்சியான தயிர், மோர், நீர்க் காய்கறிகள், திராட்சை, வாழைப்பழங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை தவிர்ப்பது நல்லது. இன்றைய பரபரப்பான காலத்தில் இளைய தலைமுறையினர் எண்ணெய் குளியலை மறந்தே விட்டனர்.
நம் உடலுக்கு நலம் தரும் பிரத்யேக எண்ணெய்களையும் பயன்படுத்தலாம். நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காகப் பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால், உடல் பழகிவிடும்.