பிச்சை எடுப்பதை தடுக்க பலே ஐடியா போட்ட மாவட்ட ஆட்சியர்..!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகரம், நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட நகரங்களில் முதன்மையானது. மத்திய அரசின் சிறப்பான செயல்பாடு கொண்ட ஸ்மார்ட் சிட்டியாக தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்ட நகரம்.
இதற்கு, இங்கு பின்பற்றப்படும் சுகாதாரம், சாலை, சாக்கடை, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட அன்றாட பணிகள் மிக முக்கியமானவை.
அத்துடன், மாநகர நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளும் ஒரு முக்கிய காரணம். அதன் தொடர்ச்சியாக தற்போது, புதுமையான திட்டம் ஒன்றை இந்தூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
அதன்படி பிச்சைக்காரர்கள் இல்லாததாக மாநகரத்தை மாற்றும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஒரு முடிவு செய்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இந்தக் கொள்கை அமல்படுத்தப்படும்.
இது குறித்து கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறியதாவது:
பிச்சை எடுப்பதையும், கொடுப்பதையும் தடுப்பதே எங்கள் நோக்கம். இதற்கு
விழிப்புணர்வு பிரசாரம் டிச., இறுதிக்குள் மேற்கொள்ளப்படும். அதன்பின், சாலையில் யாசகம் வழங்குபவர்கள் பிடிபட்டால் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும்.
சாலையில் செல்பவர்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை நிச்சயம் இருக்கும்.
எனவே யாரும் பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டாம்.
பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 10 நகரங்களில் பிச்சை எடுப்பதில் இருந்து விடுவிப்பதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் இந்தூரும் அடங்கும்.
இவ்வாறு ஆஷிஷ் சிங் கூறினார்.