அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையில் மயங்கி விழுந்த மாவட்ட பாஜக தலைவர்..!
’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் தழுவிய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் இரவு வரை அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். நடைபயணத்தின் போது அவருடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர் பங்கேற்றனர்.
அண்ணாமலை நடைப்பயணத்தின் போது கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சங்கீதா, திடீரென மயங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து 10.30 மணியளவில், சோமனூர் பேருந்து நிலையம் அருகே வந்த அண்ணாமலை, அங்கு இரவு 11.45 மணி வரையிலும் உரை நிகழ்த்தினார்.
இதன் பின்னர் கோவை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனது காரை நிறுத்திய அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் காரில் அமர்ந்தபடியே இரவு உணவை சாப்பிட்டனர். இந்த புகைப்படங்களை பாஜகவினர் தற்போது இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.