1. Home
  2. தமிழ்நாடு

குடும்பத்தில் தகராறு..! மனைவியை கொன்று உடலை படுக்கைக்குள் மறைத்த டிரைவர்!

1

டெல்லியில் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கடந்த 3-ந்தேதி போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஒரு அறைக்குள் பெட்டி படுகைக்குள் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது வாய் வெள்ளை துணியால் கட்டப்பட்டு இருந்தது.

உடலைக் கைப்பற்றிப் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் தீபிகா சவுகான் (வயது26) என்பது தெரியவந்தது.

மேலும் இவரது கணவர் தன்ராஜ் பிரபல பைக் டாக்ஸி செயலிகளின் டிரைவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

தன்ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் செலவழித்து வந்த அவர் குடும்ப செலவுக்காக மனைவியிடம் பணம் கொடுப்பதில்லை. தீபிகா ஸ்பா ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துக் குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் தீபிகாவின் நடத்தைமீது தன்ராஜுக்கு சந்தேகம் வந்துள்ளது. தீபிகா ஒரு ஆண் நண்பருடன் நெருங்கிப் பழகுவதாகச் சந்தேகப்பட்ட தன்ராஜ் கடந்த 29-ந்தேதி மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அவர் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் தீபிகாவின் உடலைப் பெட்டி படுக்கைக்கு இடையில் மறைத்து வைத்து விட்டுத் தப்பி சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து மனைவியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசி விட்டுத் தப்பி விடலாமெனத் திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக யூடியூப்பில் உடலை வெட்டுவதற்கான வழிகள்குறித்து வீடியோக்களையும் பார்த்துள்ளார்.

பின்னர் மனைவியின் உடலை வெட்டி வீசுவதற்காகத் தனது நண்பர்கள் சிலரின் உதவியை நாடியுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கு தப்பி சென்ற அவர் பின்னர் ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் இடங்களுக்கும் சென்றுள்ளார்.

இந்நிலையில் மனைவியுடன் நெருங்கிப் பழகிய ஆண் நண்பரையும் கொலை செய்ய வேண்டும் எனத் திட்டம் தீட்டிய அவர் மீண்டும் டெல்லி திரும்பி உள்ளார்.

இதற்கிடையே தீபிகா உடலைக் கைப்பற்றிப் போலீசார் நடத்திய விசாரணையில் அவரைத் தன்ராஜ் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தன்ராஜின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் யூ.பி.ஐ. மூலம் வேறொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியதை கண்டுபிடித்த போலீசார் அவர் அமிர்தசரசிலிருந்து டெல்லிக்கு திரும்புவதையும் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தன்ராஜை டெல்லி திரும்பும் வழியிலேயே மடக்கி பிடித்துக் கைது செய்தனர். அப்போது அவர் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் மனைவியுடன் பழகிய ஆண் நண்பரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியதையும் ஒப்புக்கொண்டதாகவும், அந்தத் திட்டத்தை முறியடித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like