வீட்டிற்கு வந்த உறவினருடன் தகராறு.. தலைமைக் காவலரின் மனைவி அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கணவாய்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. மத்திகிரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த இவருக்கு செங்கொடி என்ற மனைவியும் கிஷோர், மைத்ரேயன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்தநிலையில், சின்னதுரையின் மனைவி செங்கொடிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் செங்கொடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சின்னதுரை பணி நிமித்தமாக மத்திகிரி பகுதியில் இருப்பதால் குழந்தைகள் இருவரையும், சின்னதுரையின் சகோதரி கவனித்து வந்தார்.
மேலும், குழந்தைகளின் படிப்பு பாதிக்காமல் இருக்க சேலத்தில் இருந்து இங்கு வந்து தங்கி இரண்டு குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், செங்கொடி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இது தனது வீடு, நான் இங்கு தான் இருப்பேன் என கூறி, வலுக்கட்டாயமாக தங்கியிருதுள்ளார்.
இந்த நிலையில், காவலர் சின்னதுரையின் சகோதரன் ரத்தினம் என்பவர், குழந்தைகளை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது செங்கொடி, இங்கே யாரும் வரக்கூடாது என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், செங்கொடிக்கும், ரத்தினத்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ரத்தினம், அருகில் கிடந்த கட்டையை எடுத்து செங்கொடியின் தலையில் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த செங்கொடி சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செங்கொடியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சகோதரனின் மனைவியை கொலை செய்த ரத்தினம் தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் தானாக சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in