வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு : அண்ணனை கொன்ற தம்பி!!

மதுரை அலங்காநல்லூர் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.
அலங்காநல்லூர் அருகே வயலூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மருதுபாண்டி (55). இவரது வயலுக்கு அருகே அவரது தம்பி சுரேஷுக்கு சொந்தமான வயல் உள்ளது. இந்நிலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், மருதுபாண்டி தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முயன்ற போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதையடுத்து ஆத்திரத்தில் சுரேஷ், தனது அண்ணன் மருதுபாண்டியை உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார்.
இதில், பலத்த காயமடைந்த மருதுபாண்டியன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சுரேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்த சமயநல்லூர் காவல் துறையினர் தப்பியோடி தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in