பேனர் வைப்பதில் தகராறு.. பாஜக பிரமுகருக்கு சரமாரி கத்திகுத்து

சென்னை அயனாவரம் டி.பி.சண்முகம் தெருவில் ஜெயக்குமார் (41) என்பவர் பால் கடை நடத்தி வருகிறார். இவர் வில்லிவாக்கம் தெற்கு பகுதி பாஜக பொருளாளராகவும் உள்ளார். தொழிலை கவனித்துக்கொண்டு கட்சி பணிகளிலும் ஜெயக்குமார் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஜெயக்குமார், பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அயனாவரம் பகுதியில் பேனர் வைத்து வாழ்த்து கூறியிருந்தார். இந்த பேனர் வைத்தது தொடர்பாக, அயனாவரம் ரங்கநாதன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசிகுமாருக்கும் (30), இவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார், ஜெயக்குமார் வைத்திருந்த பேனரை கிழித்துள்ளார். இதுகுறித்து ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார், இருவரையும் அழைத்து பேசி பிரச்னையை முடித்து வைத்தனர்.
ஆனால், இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு 10 மணிக்கு ஜெயக்குமார், தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, அங்கு வந்த சசிகுமார், ஜெயக்குமாரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை 3 இடங்களில் குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெயக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
newstm.in