செடிகளை அப்புறப்படுத்தியபோது விபரீதம்.. 70 அடி கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (55). விவசாயியான இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், அருள்மணி என்ற மகனும், அகிலா, ஆர்த்தி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
சேலம் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பழனியின் விவசாய கிணற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் கிணற்றை சுற்றி முளைத்துள்ள செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் பழனி ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றின் மண் திட்டு சரிந்ததால் கிணற்று மேட்டில் நின்று கொண்டிருந்த அவர் மண் திட்டோடு கிணற்றுக்குள் விழுந்தார்.
இதனைக்கண்ட இவரது உறவினர்கள் வாழப்பாடி போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புபடையினர், பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த பழனியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடியும் மீட்க முடியாததால் இரவு முழுக்க கொட்டும் மழையில் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் அகற்றி 20 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பழனியின் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.