சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்.. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆந்திர போலீசார் சோதனை..!
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில்ச்நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாளே ஒரு ஆய்வக ரிப்போர்ட் வெளியானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யை பரிசோதனை செய்த ஆய்வகத்தின் அறிக்கையின்படி, மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை திருப்பதி லட்டுவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமானது.
திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தரப்பில், தங்களது தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்தத் தயார் என தெரிவிக்கப்பட்டது.அது மட்டுமல்லாமல், நெய் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர விதிகளை கடைபிடிக்க தவறிவிட்டதாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியது. லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளது.
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் அளித்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விநியோகித்த நெய்யில் கலப்படம் செய்ததாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா புகார் அளித்தார்.
இந்நிலையில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆந்திர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .லட்டு தயாரிக்க தரம் குறைந்த நெய்யை விற்பனை செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஆந்திர போலீசார், ஏ.ஆர்.டெய்ரி நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்