ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர்கள் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் சான்று..!
அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்: ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில், நேரில் சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி அஞ்சல்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். சென்னை நகர மண்டலத்தில் 2,191 நகர்ப்புற மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் மூலம் 2,500க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள், ஆதார் மொபைல் எண்ணை புதுப்பித்தல், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் சார்ந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர்.
சென்னை நகர மண்டலம், கடந்த 2022-23ஆம் நிதியாண்டில், சுமார் 1,16,137 மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, தபால்காரர்கள் மூலம் அவர்களின் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழைச் சமர்பிக்க வழிவகை செய்துள்ளது. மத்திய, மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் இதர தகுதி வாய்ந்த ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரர்கள் மூலம் அஞ்சல் துறையால் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.