நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? அக்.22-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று ஆந்திராவில் கரையைக் கடந்தது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழையும் குறைந்தபட்சமாக 22 செமீ மழையும் பதிவாகி இருந்தது. இதனால் சென்னை மாநகரில் நேற்று முன்தினம் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் வங்க கடலில் அந்தமான் பகுதியில் வரும் 20-ந் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் அக்டோபர் 22-ந் தேதி வங்க கடலில் புதியதாகக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடிய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.