1. Home
  2. தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணியில் சேர விஜய் நிபந்தனை வைத்தாரா ?

Q

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்துள்ளது.
ஆனால், நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில், பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
கூட்டணியை பழனிசாமியால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று, அவரது கட்சியினரே திகைத்து நின்ற நேரத்தில், நடிகர் விஜய் களமிறங்கி இருக்கிறார்.
தி.மு.க., எதிர்ப்பை அவர் பிரதானமாக கையில் எடுத்திருப்பது, அ.தி.மு.க.,வுக்கு இணக்கமான அம்சம். எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அக்கட்சியை விஜய் இதுவரை விமர்சிக்கவில்லை என்பது, இன்னொரு பிளஸ் பாயின்டாக பார்க்கப்படுகிறது.
ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத கட்சியை விமர்சனம் செய்வதில் அர்த்தம் இல்லையே என்று, விஜய் கட்சியினர் விளக்கம் அளிக்கின்றனர்.
அதில், நியாயம் இருந்தாலும், பாரம்பரியமான தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை வைத்துள்ள அ.தி.மு.க.,வை விமர்சிப்பது, தன் புதிய கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை விஜய் உணர்ந்துள்ளார். இதையே அவரது மவுனம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில், 50 சதவீத ஓட்டுகளுக்கு மேல் வாங்கி, உண்மையான பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சிக்கு வருவது இல்லை. 25 முதல், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே வாடிக்கையாக நடக்கிறது.
ஆட்சி கட்டிலுக்கு கூட்டணி தான் பாதை என்று நாடெங்கும் உறுதியான பிறகு, என் வழி தனி வழி என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
அதே சமயம், பத்தோடு பதினொன்றாக எந்தக் கூட்டணியிலும் சேர அவர் தயாராக இல்லை. அதன் விளைவு தான், அ.தி.மு.க.,வை நோக்கி அவரை நகர வைத்துள்ளது என்று விஜய்க்கு நெருக்கமான ஒரு ஆலோசகர் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வின் ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த போது, 70:30 என்ற விகிதத்தில் தொகுதிகளை பங்கிட்டனர். அதன்படி அ.தி.மு.க.,வுக்கு 163, காங்கிரசுக்கு 71 என, பிரிக்க முடிந்தது. எம்.ஜி.ஆர்., பார்முலா என்றே அதற்கு பெயர் சூட்டினர்.
விஜய் அதிலும் ஒரு அடி முன்னால் செல்ல விரும்புகிறார். த.வெ.க.,வுக்கு, 80 கேட்கிறார். அப்படி கொடுத்தால் அ.தி.மு.க.,வுக்கு, 154தான் மிஞ்சும்.
அப்படி நடந்து வெற்றியும் வசமானால், பழனிசாமி முதல்வர், விஜய் துணை முதல்வராகலாம். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தன் ஈகோவை கழற்றி வைத்து விட்டு, நடிகர் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது போல, பழனிசாமியும் செய்தால் முதல் தேர்தலிலேயே துணை முதல்வர் நாற்காலியில் அமரலாம் என, விஜய்க்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
இறுதி முடிவு எதுவும் எட்டவில்லை என, இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கூறுகின்றனர். 

Trending News

Latest News

You May Like