ஈரானுக்கு ஆதரவாக பேசினாரா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்..?

இஸ்ரேல், ஈரான் நாட்டின் மீது நடத்திய இராணுவ தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் .
இஸ்ரேல் தனது தாக்குதலை, ஈரானின் அணுசக்தி வளங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் கீழ், ஈரானின் முக்கிய நகரங்கள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய அணு விஞ்ஞானர்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் உயிரிழந்துள்ளனர்.
தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல், மற்ற நாடுகள் அதே வலிமையை பெறுவதைத் தடுக்க விரும்புவதைத் திருமாவளவன் தவறான இரட்டை நிலைமையாக விமர்சித்தார். இந்த நடவடிக்கை, உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், மூன்றாவது உலகப் போருக்கே தூண்டிலாக இருக்கலாம் என்றும் அவர் எச்சரிக்கை தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், ரஷ்யா, சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் இந்த தாக்குதலை கண்டித்து வெளியறிக்கை செய்துள்ளன. ஆனால் இந்தியா மட்டும் இதற்கான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
மோடி அரசு, பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்ததைப் போலவே, தற்போது மீண்டும் கள்ள மௌனத்தில் இருப்பது வருத்தக்கேடானது எனவும், இது இந்தியாவை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த தாக்குதலால் உருவாகக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் இந்தியாவையும் கடுமையாக பாதிக்கக்கூடும் எனும் அபாயத்தை அவர் உணர்த்தினார்.
எனவே, இந்திய ஒன்றிய அரசு இஸ்ரேலின் இந்த இராணுவ நடவடிக்கையை திறந்தவெளியாகக் கண்டிக்க வேண்டும் என்றும், இது உலக அமைதிக்கு மக்களவையில் எடுத்துரைக்கப்பட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக அவ்வப்போது ஈரான் தரப்பில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இஸ்ரேல், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக ஈரானின் அணு ஆயுத கிடங்குகளை ஏவுகணை கொண்டு அழித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் இஸ்ரேல் தனது முன்விரோதத்தை நிறுத்தி, அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும் என உலக நாட்டு தலைவர்கள் வலியுறுத்துகின்றனா். எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானை விடாது தாக்கி வருகிறார். இதனால் இரு நாடுகள் இடையே உள்ள போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்று இஸ்ரேல் பிரதமர், இந்திய பிரதமர் மோடியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து இருந்தது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானை தாக்கியதில் இஸ்ரோலிடம் வாங்கிய ஆயுதங்களுக்கு அதிக பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.