தவறான நபரின் காலை கழுவினாரா மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் ?
சிறுநீர் கழிக்கப்பட்ட நபரும், முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் காலை கழுவி மன்னிப்புக் கேட்ட நபரும் வேறு வேறு என்றும், பாஜக ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியிருக்கிறது. பாதிக்கப்பட்ட நபராகக் கருதப்படும் தஷ்மத் ராவத், சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் காணப்படும் நபர் தான் அல்ல என்று தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு, குற்றவாளி பிரவேஷ் ஷுக்லாவை நான் பார்த்ததுகூட கிடையாது, எனது உறவினர் ஒருவர்தான் மோசடியாக பிரமாணப் பத்திரத்தில் என்னைக் கையெழுத்திட வைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
உண்மையாக பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலாக, வேறு நபரின் காலை கழுவி நாடகமாடியதாக, முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹானை மத்தியப் பிரதேச காங்கிரஸ் கடுமையாக சாடியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சுக்லாவை, விடுதலை செய்யுமாறு மாநில அரசுக்கும் ராவத் வேண்டுகோள் விடுத்திருந்ததாகக் கூறப்பட்டது. அதாவது, தான் செய்த தவறை அவர் உணர்ந்து திருந்திவிட்டதால், அவரை விடுதலை செய்துவிடலாம் என்று ராவத் கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
பாதிக்கப்பட்ட நபரே தான் அல்ல என்று கூறும் ராவத், பிறகு, குற்றவாளியை விடுதலை செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொண்டது ஏன்? கேட்டுக் கொண்டாரா அல்லது, அவரை பாதிக்கப்பட்டவராகக் காட்டி குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக கேட்டுக் கொள்ள வைக்கப்பட்டாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட நபர் இவர் இல்லையென்றால், உண்மையில் பாதிக்கப்பட்ட நபர் யார்? எங்கிருக்கிறார்? என்ற தகவல்களும் வெளியாகாமல் இருப்பது பரபரப்பை கூட்டியிருக்கிறது.