1. Home
  2. தமிழ்நாடு

3 பெண்களை கார் வைத்து இடித்தாரா KGF நடிகை?

11

தமிழ் சினிமாவில் ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் 90களின் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். மும்பையைச் சேர்ந்தவரான ரவீனா டாண்டன்,  இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். முன்னதாக கேஜிஎஃப் படத்தில் ரமிகா சென் எனும் கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் யஷ்ஷூக்கு சரிசமமாக மாஸ் காண்பித்து, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்தார். 

இந்நிலையில், வயதான பெண் உட்பட மூன்று பெண்களை ரவீணாவும் அவரது கார் டிரைவரும் தாக்கியதாக உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டி சண்டை போடும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் தற்போது #RaveenaTandon என டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், ரவீணாவை பெண்கள் தாக்கும் பதை பதைக்க வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து என்னை அடிக்காதீர்கள் என்று நடிகை தன்னை தற்காத்துக் கொள்வதை பார்த்த ரசிகர்கள் பதறிப்போயுள்ளனர்.

மும்பையின் கார்ட்டர் சாலையில் ரிஸ்வி கல்லூரிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக கூறுகின்றனர். குடிபோதையில், சில பெண்கள் வழிமறித்ததை அடுத்து ரவீணா காரை விட்டு இறங்கினார். அப்போது அவரை சூழ்ந்து கொண்டு சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவரது கணவர் அனில் ததானியும் கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வரும் அந்த வீடியோவில் ரவீணாவை சுற்றி வளைத்த உள்ளூர்வாசிகள் போலீசுக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட ஒருவர், "நீங்கள் சீக்கிரம் ஜெயிலுக்குப் போகப் போறீங்க, என் மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது" என்கிறார். கேமராவை கவனித்த ரவீணா, பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பின்னர், முகமது என்ற நபர் தனது தாய், சகோதரி மற்றும் மருமகள் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காட்டுகிறார். இது குறித்து ரவீணா டாண்டன் இன்னும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.

ரவீணாவின் கார் இடிக்கவே இல்லை என்றும் ரவீணாவிடம் பணம் பிடுங்கவே சிலர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் ரவீணா டாண்டனின் கார் வேகமாக வந்தது போலவே தெரியவில்லை என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை தொடர்பாக விரைவில் ரவீணா டாண்டன் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Trending News

Latest News

You May Like