1. Home
  2. தமிழ்நாடு

உண்மையிலேயே அப்படி சொன்னாரா..? இந்திய இராணுவத்தினர் பற்றி அவதூறாகப் பேசினாரா சாய் பல்லவி?

1

சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகவுள்ளது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் உருவான இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக அமரன் உருவாகியுள்ளது. இதுவரை இப்படத்திலிருந்து வெளியான ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் காரணமாக படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னை டோட்டலாக மாற்றியுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது நம்ப சிவகார்திகேயனா இது ? என ரசிகர்களுக்கு தோன்றும் வகையில் தன்னை டோட்டலாக மாற்றியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி இந்திய இராணுவ வீரர்களைப்பற்றிப் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அதில் சாய் பல்லவி, இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தான்காரர்களுக்குத் தீவிரவாதிகள் எனச் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பரவக்கூடிய வீடியோவில், ‘Great andhra’ என்ற லோகோ இருப்பதைக் காணமுடிகிறது. இதனைக் கொண்டு தேடியதில், 2022, ஜூன் 12ம் தேதி சாய் பல்லவியின் நேர்காணல் அந்த யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

அதன் தலைப்பிலேயே ‘Virata Parvam’ என்ற திரைப்படத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சாய் பல்லவி நக்சல் அமைப்பைச் சேர்ந்தவராக நடித்திருந்தார். இது தொடர்பான நேர்காணல்தான் இந்த வீடியோ. 


அந்த முழு வீடியோவின் 7 நிமிடம் 54 வினாடியில் பரவக்கூடிய பகுதி இடம்பெற்றுள்ளது. தெலுங்கு மொழி அறிந்த ஒருவரின் உதவியுடன் அந்நேர்காணலில் சாய் பல்லவி பேசியதை அறியமுடிந்தது. "நக்சலாக சீருடை மற்றும் துப்பாக்கிக் கொண்டு நடித்துள்ளீர்கள், அவர்கள் மீதி அனுதாபம் உள்ளதா?" என நெறியாளர் VSN மூர்த்தி கேள்வி கேட்கிறார். 

"இது சித்தாந்தம் பற்றியது. ஒருவர் ஒரு சித்தாந்தத்தை வைத்திருந்தாலும், வன்முறை தீர்வல்ல" எனப் பதில் அளித்துள்ளார். மேலும், "வன்முறை மூலம் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முடியுமென நான் நம்பவில்லை. அதே நேரத்தில் நம் பிரச்சனையை அவர்களிடம் எப்படி வெளிப்படுத்துவது? சட்ட வழிமுறைகள் இருக்கும் போது எது சரி? எது தவறு? என்பதைத் தீர்மானிக்க வேண்டும்" எனக் கூறுகிறார். 

தொடர்ந்து பேசுகையில், "பாகிஸ்தான் மக்கள் நமது இராணுவத்தினரைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கிறார்கள். இங்கு நம்மைப் பொறுத்த அளவில் அவர்களின் இராணுவம் பயங்கரவாதிகள். இப்படி கண்ணோட்டம் மாறுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. எனக்கு வன்முறையைப் புரிந்துகொள்ள முடியவில்லை" எனக் கூறியுள்ளார். 

நேர்காணலில் எந்த ஒரு இடத்திலும் இந்திய இராணுவத்தைப் பயங்கரவாதிகள் என்று அவர் கூறவில்லை. ஒருவருக்குப் பயங்கரவாதியாகத் தெரிபவர் மற்றொருவருக்குச் சுதந்திர போராளியாகத் தெரிவார் என்கிற மாறுபட்ட கண்ணோட்டத்தையும் அது பற்றிய தனது குழப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

அந்நேர்காணலில் சிறு பகுதியை மட்டும் திரித்து தவறான கண்ணோட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.  

Trending News

Latest News

You May Like