தமிழக பாஜக மாநிலத் தலைவராகும் உங்களுக்கு அண்ணாமலை வாழ்த்து சொன்னாரா?நயினார் நாகேந்திரன் பதில்

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படவுள்ளார்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் தமிழக பாஜக வீறுநடை போடவுள்ளது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், அவசரப்பட வேண்டாம். இன்று விருப்ப மனு மட்டும் தான் தாக்கல் செய்துள்ளேன். நாளை தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரிகள் வெளியிடுவர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து உங்கள் அனைவரின் கேள்விக்கும் பதிலளிக்கிறேன் என்றார்.
அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேசுகையில், அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வதும், பிரிவதும் காலங்காலமாக நடந்து வருகிறது. ஒரு காரணத்திற்காக பிரிந்திருக்கலாம். வேறொருவரின் காரணத்தால் ஒன்றிணையலாம் என்று கூறினார். இன்றைய மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே பங்கேற்றார். அப்படியெனில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவில்லை என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கும் மேல் இருக்கிறது.
அதற்குள் நிறைய மாற்றங்கள் நடக்கும். புயல் அடிக்கும். மழை பெய்யும். தற்போது வெயில் அடிக்கிறது. எல்லா பருவச் சூழலும் தமிழக மக்களுக்கு சிறப்பாக கிடைக்கும் எனப் பதிலளித்தார். நயினார் நாகேந்திரன் தலைமையில் தமிழக பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, அதை நானே எப்படி சொல்ல முடியும்.நடைமுறையில் நீங்கள் பார்க்க வேண்டும். நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்று நீங்கள் தான் மதிப்பிட வேண்டும் என்றார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவராகும் உங்களுக்கு அண்ணாமலை வாழ்த்து சொன்னாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இது அண்ணாமலை கொடுத்த பேனா என்று பேனா ஒன்றை நீட்டினார்.
இதை கொடுத்து கையெழுத்து போடச் சொன்னார். என் கையை பிடித்து அழைத்து சென்றார். அவருடைய காலத்தில் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. அவரின் உதவியோடு இன்னும் வளர்ச்சி அடைய பாடுபடுவோம். அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.