ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க ஷூவில் கையெழுத்திட்ட தோனி !
முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்தாலும் ரசிகர்களின் விருப்ப நாயகனாக இன்றளவும் இருந்து வருகிறார். 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கும் சிஎஸ்கே கேப்டனான தோனி, ரசிகர்களின் அதிகப்படியான அன்பின் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.
இருந்தபோதும் இது தல தோனிக்கு கடைசி ஐபிஎல்லா?, அப்படியிருந்தால் தோனியின் அடுத்த முடிவு என்ன?, சிஎஸ்கே அணிக்கே பேட்டிங் கோச்சாகவோ அல்லது ஆலோசகராகவோ செயல்படுவாரா? என்ற பல கேள்விகளை தோனி மற்றும் சிஎஸ்கேவின் ரசிகர்கள் கேட்ட வண்ணமே இருக்கின்றனர். இருப்பினும் எதற்கும் பதிலளிக்காமல் ’அது தோனியின் கையில் தான் இருக்கிறது, அது அவருடைய முடிவு’ என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துவருகிறது.
இந்நிலையில் எப்போதும் தோனியை பின்தொடரும் ரசிகர்கள் அவருடைய இயல்பான குணத்திற்காகவும், சிறந்த செயலுக்காகவும் பாராட்டிவரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவத்திற்கு புகழ்ந்து வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கும் ரசிகர் ஒருவர், “என்னுடைய நாளை சிறந்ததாக மாற்றியமைத்ததற்கும், எனது ஷூவில் ஆட்டோகிராப் வழங்கியதற்கும் நன்றி எம்.எஸ். தோனி” என்று பதிவிட்டு உடன் ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார். அந்த வீடியோவில், முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் ஷூவில் ஆட்டோகிராஃப் போட்டுக்கொண்டிருந்தார். தோனியின் இயல்பான இந்த செயலை பார்த்த தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பதியப்பட்ட அந்த வீடியோ கமெண்ட்டில் பேசியிருக்கும் ஒரு ரசிகர், “சகோதரரே, அந்த காலணிகளை ஃபிரேம் செய்யுங்கள், தயவுசெய்து அணிய வேண்டாம்” என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் ஒருவர், “எனக்கும் ஜாம்பவான் எம்எஸ் தோனி சார் இடமிருந்து ஆட்டோகிராப் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்துவருகின்றனர்.