தருமபுரி வார சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடிப் பெருக்கு. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 தினத்தை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரியிலும் ஆடிப்பெருக்கு அன்று களைகட்டும். மாவட்ட மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று நீர் நிலைகளில் புனித நீராடி குலதெய்வங்களை வழிபடுவார்கள். ஆடு பலியிட்டு படையல் செய்து பூஜையுடன் வழிபாடு நடத்துவது தருமபுரி மாவட்ட மக்களின் பாரம்பரியமான வழக்கம். அந்த வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவிழாக்கள் மற்றும் இறைச்சிக்காக நல்லம்பள்ளி செவ்வாய்க்கிழமை வார சந்தையில் ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
கடந்த வாரத்தை விட ஆடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது. இதனால் ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆடு ஒன்று குறைந்த விலை 7,000 ரூபாயில் தொடங்கி 35 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இன்று மட்டும் வாரச் சந்தையில் சுமார் 2,000 ஆடுகள் 2 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனையானது.