மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்..!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த திருவிழாவை காண வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற வேடங்கள் அணிவார்கள்.
குலசேகரன்பட்டினம் கோவிலை பொறுத்தவரை 90 நாள், 48 நாள், 31 நாள், 12 நாள், 10 நாள் என பல்வேறு நாட்கள் விரதத்தை கடை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் குலசேகரப்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.
சிறப்பு வாய்ந்த குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா வருகிற அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ம் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். இதற்கிடையே, தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக குலசேகரன்பட்டி னம் புறவழிச் சாலை, உடன்குடி சாலை, மணப்பாடு சாலை, திருச்செந்தூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அப்பகுதியில் உள்ள முட்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, மேடு, பள்ளங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் 20 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடங்களில் தற்காலிக நடமாடும் சுகாதார வளாகங்களும் அமைக்கப்பட உள்ளது.