1. Home
  2. தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை..!

Q

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி இன்று (04.02.2025) போராட்டம் நடத்த இருப்பதாக இந்து அமைப்பினர் அறிவித்தனர். ஆனால், இந்து அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் நடத்த உள்ள போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இத்தகைய சூழலில் தான் மதுரை மாவட்ட ஆட்சியர், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் நேற்று (03.02.2025) வெளியிட்ட உத்தரவில் ‘இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை 2 நாட்களுக்கு வெளியூர் நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பொது அமைதியைப் பாதுகாக்கும் விதமாகப் போராட்டங்கள், கூட்டங்கள், தர்ணாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதித்துக் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது சென்று பக்தர்கள் வழிபட இன்று ஒருநாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like