திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை..!
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் கடலில் புனித நீராடுவது வழக்கம். கோடை விடுமுறை என்பதால் தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
கோவில் கடற்கரையில் சமீப காலமாக கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்குகின்றன. இந்த ஜெல்லி மீன்களால், கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் வந்தன.
இந்நிலையில், கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், கடலில் பக்தர்கள் புனித நீராட கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நேற்று விடுமுறை தினம், என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் குளிக்காமல், நாழிக்கிணற்றில் மட்டும் குளித்தனர்.