1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் ஷாக்..! இனி தமிழக சுற்றுலா துறை மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் பெற முடியாது..!

1

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடந்தது. இந்த வாரியத்தின் 54 ஆவது தலைவராக பிஆர் நாயுடு பொறுப்பேற்றார்.

அவரது தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை வேறு துறைகளுக்கு மாற்ற ஆந்திர அரசுக்கு தேவஸ்தான அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. அன்னமய்யா பவனில் நடந்த இந்த கூட்டத்தில் 3 மணி நேரம் 80 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. 

செயற்கை நுண்ணறிவு மூலம் பக்தர்கள் அதிக நேரம் இருப்பதை கண்டறிந்து அவர்களை வெறும் 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழியர்களை வேறு துறைகளுக்கு மாற்ற பரிந்துரை செய்வது குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது. வேற்று மதத்தினர் இனி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணி செய்ய ஒப்புக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில், திருப்பதியில் இந்துக்கள் அல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தியது வாரியத்தில் உள்ள பலரை வருத்தமடைய செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சீனிவாச சேது மேம்பாலம் அடுத்த நான்கு மாதங்களுக்கு கருட வரதி என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இனி கோவில் தொடர்பாக யாரும் அரசியல் கருத்துக்களை பேசக்கூடாது என பொறுப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். யாராவது அப்படி செய்தால், அவர்கள் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாரியம் எச்சரித்துள்ளது. அதே போல கோவிலுக்கு வரும் அரசியல் தலைவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் என யாரும் கோவிலில் இருக்கும்போது தங்கள் அரசியல் கருத்துக்களை பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்த திருமலை ஸ்ரீவாரி கோயிலில் நடந்த வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் போது சிறப்பாகப் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்க TTD வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.

பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை 20-30 மணிநேரத்தில் இருந்து 2-3 மணிநேரமாக குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) எனப்படும் ஸ்மார்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை அனைவரும் எளிதாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.திருமலையில் உள்ள அன்னபிரசாத வளாகத்தில் தினசரி லட்டு தயாரிப்பில் சுவையான செய்முறையை சேர்க்க வாரியம் முடிவு செய்துள்ளது.

தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள ஏழுமலையானின் நகைகள், பணம் உள்ளிட்டவை இனி அரசு வங்கிகளில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம், புதுவை, தெலுங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட இதர மாநிலங்களின் சுற்றுலா துறைக்கும் ஆந்திர அரசு பஸ் கழகத்திற்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இதுவரை ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே இந்த தரிசன முறையை தேவஸ்தானம் ரத்து செய்வதாகவும் அவர் அறிவித்திருந்தார். தமிழக அரசு சுற்றுலா துறையின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. அந்த வகையில் சென்னையிலிருந்து திருமலை திருப்பதிக்கு ஒரே நாளில் பேருந்து மூலம் சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்லப்படுகிறது.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இருந்து தினமும் காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கிறது. ஒவ்வொரு பேருந்திலும் ஒரு வழிகாட்டி இருப்பார். அவர் தமிழ், ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை கொடுப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவானது திருத்தணியில் உள்ள தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்ய வைக்கப்படுகிறார்கள்.

தரிசனம் முடிந்ததும் திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படும். மதிய உணவுக்கு பிறகு திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்த பின்னர் இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு கொண்டு வந்து பயணிகளை விட்டுவிடுவதுடன் இந்த சுற்றுலா முடிகிறது. இதற்கு ஒரு நபருக்கு ரூ 2000 முதல் ரூ 2500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சலுகையைத்தான் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டனர்.

Trending News

Latest News

You May Like