குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் சூட்டுங்கள் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து கார் மூலம் நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவரை வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் ஜீ.வி. மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து இன்று (நவ.14) காலை தூத்துக்குடி லட்சுமி மகாலில் வடக்கு மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் மகாலில் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் இல்ல திருமணத்தை உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
சுயமரியாதை திருமணங்கள் திராவிட இயக்கங்கள் உருவானதால் தான் நடந்து வருகிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி இல்லை என்றால் இது போன்ற சீர்திருத்த திருமணங்கள் நடத்த வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும். தமிழில் திருமணம் தமிழில் அர்ச்சனை என்பதெல்லாம் திராவிட இயக்கம் தோன்றியதால் தான் வந்தது. கோயில் கருவறையில் கூட இன்றைக்கு தமிழ் ஓசை கேட்கிறது என்றால் அதற்கு திமுக தான் காரணமாகும். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திமுக ஆட்சியில் தான் வந்தது.
பிற்போக்குத்தனத்தை வேரோடு பிடுங்கி எறிந்து பெண்களுக்கு சம உரிமை கிடைக்க செய்ததும் திராவிட இயக்கம் தான். இதனால் தான் இன்றைக்கு இந்த விழாவில் கூட பெரும்பாலும் பெண்கள் அதிகமாக வந்துள்ளனர். இருக்கையில் அமர்ந்துள்ளதும் பெண்கள் தான். ஆண்கள் ஓரத்தில் நிற்கும் அளவுக்கு பெண்களுக்கு ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியாக இருந்தாலும் சரி பெண்களுக்கு தான் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டம் மாதம் ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் பெண்களின் சுமையை போக்க குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000 தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்கும் அளவுக்குகு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தம்பதியர்களுக்கு ஒரு வேண்டுகோளாக நான் வைக்க விரும்புவது, குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதுதான். அனைவரும் இதனை செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு உதயநிதி பேசினார்.
பின்னர் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 15 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள வீட்டுமனை பட்டா தொடர்பான மனுக்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மாநகராட்சி பகுதியில் 16 கிலோ மீட்டர் தூரம் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு தடை இருப்பதால், தனியார் நிலங்களை அரசு விலைக்கு வாங்கி ஏழை மக்களுக்கு வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே உள்ள மாற்றுத்திறனாளியின் பழக்கடையை பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 7,893 பயனாளிகளுக்கு ரூ.206.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் பெ.கீதாஜீவன் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, ஊர்வசி ஏஸ். அமிர்தராஜ் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை செயலர் தாரேஸ் அகமது, துணை செயலர் மு. பிரதாப், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.